மும்பையின் விரார் பகுதியில் உள்ள பினாகிள் அடுக்குமாடியில், 21-வது மாடியில் இருந்த 7 மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் நடைபெற்றுள்ளது.

விக்கி சடானே மற்றும் பூஜா சடானே தம்பதியருக்கு, திருமணமாகி 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்திருந்தது. இந்த நிலையில் குழந்தையை பார்வையிட குடும்பத்தினர் வந்திருந்தனர்.

ஜாய்வில்லே குடியிருப்புத்திட்டத்தில் உள்ள அந்த வீட்டில், பூஜா சடானே ஜன்னலை மூடச் சென்றபோது, ஜன்னலருகே தேங்கியிருந்த தண்ணீரில் வழுக்கி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

தோளில் குழந்தையுடன் ஜன்னலை அடைப்பதற்காக சென்ற பூஜா, திடீரென தடுமாறியதால், குழந்தை கையிலிருந்து தவறி நேரடியாக மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. குழந்தை கீழே விழுந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பொலிஞ் காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் பிரகாஷ் காவ்லே கூறியதாவது, “விக்கி சடானே வேலைக்குச் சென்றிருந்தார். குழந்தையை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.

ஜன்னலை மூட முயன்றபோது, பூஜா தவறி வழுக்கி விழுந்ததால் குழந்தை கீழே விழுந்தது. அந்த ஜன்னலில் முழு பாதுகாப்பு க்ரில்கள் இல்லை” என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.