பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் ஒரு வீட்டின் பணியாளராக வேலை செய்து வந்த சிறுமி ஈக்ரா(13). தனது 8 வயதில் இருந்து வீட்டுப் பணியாளராக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ராஷித் சபிக் மற்றும் அவரது மனைவி சனாவிற்கு வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உரிமையாளர் வீட்டில் சாக்லேட்டுகள் திருடியதாக ஈக்ராவை குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அடித்து துன்புறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ஈக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்தக் கூடாது என சட்டம் இருந்தும், இந்த விதியை தொடர்ந்து மீறி சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈக்ராவின் தந்தை சனாவுல்லா” என் மகள் இறந்த போது நான் முழுவதும் உடைந்து போனேன்” என கண்ணீருடன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

வீட்டின் ஏழ்மை காரணமாக வீட்டு வேலைக்கு சென்ற ஈக்ரா அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் கை, கால்கள் முறிந்த நிலையில், தலையில் தீவிர அடி ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பல எதிர்ப்புகளை கிளப்பி உள்ளன. சமூக ஆர்வலர்கள் பலர் பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தி வருவதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் மதிப்பீட்டின்படி பாகிஸ்தானில் 3.3 மில்லியன் குழந்தைகள் சிறுவர் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களில்  பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகளே என சர்வதேச வேலைவாய்ப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்