
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அங்கு இன்று காலை லாரன்ஸ் அவரது குடும்பத்தினரை தென்திருப்பேரையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க அழைத்துச் சென்றுள்ளார். ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும்போது கிளாடிஸ் மற்றும் கிளாடிஸ் தங்கை மகள் அவினா (5) இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இருவரும் தத்தளித்துள்ளனர். இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.