மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை பார்த்து குரைத்தது. அந்த நாயின் சத்தத்தை தாங்க முடியாத அந்த நபர் உடனே அருகில் இருந்த பெரிய கம்பை எடுத்து அந்த நாயின் மீது சரமாரியாக அடித்தார்.

இதனால் வேதனை தாங்க முடியாமல் அந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் அந்த நபர் விடாமல் பலமுறை தாக்கினார். அதன் பின் அவருடன் வந்த பெண் அந்த வழியே இன்னொரு நாய் வருவதை கை காட்டினார். அதனை கண்ட அவர் ஓடி சென்று அந்த நாயை அடிக்க முற்பட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அந்த நபரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி அதிகாரிகள் நாயை அடித்த நபருக்கு எதிராக விலங்கு வன்முறை சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக புகார் கொடுத்த குடியிருப்பாளர்களுக்கு மேல் SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர்.