
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திருமணமான விக்கி என்ற நபருடன் பழகி வந்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் முதல் விக்கி அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட நிலைமையை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் அருண் என்பவர், சிறுமிக்கு நீதி பெற்றுத் தர உதவுவதாகவும், மேலும் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கான்ஸ்டபிள் அருண், வழக்கு குறித்து விசாரிப்பதாக ஒரு ஹோட்டலுக்கு சிறுமியை அழைத்துச் சென்று போதைப் பொருள் கலந்த மதுவை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி சுயநினைவின்றி இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
பின்னர் வெளியே கூறினால் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என தொடர்ந்து சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் தாயார் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் அருண் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் விக்கி ஆகியோர் மீது புகார் அளித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கான்ஸ்டபிள் அருண், விக்கி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.