
கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். இதனைப் பார்த்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அந்த பெண்ணிடம், 1000 ரூபாய் தருகிறோம் எங்களுடன் வா என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதற்கிடையில் இந்த 3போரையும் பார்த்த அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் குறைத்துக் கொண்டே இருந்தது. நாய்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த இளம் பெண்ணின் தாயார், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது மகளை நோக்கி ஓடி வந்தார். அதன் பின் தனது மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இருப்பினும் அந்த 3 பேரும் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றனர்.
இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவர்களை தட்டிக் கேட்ட போது, ஆத்திரமடைந்த அந்த 3 பேர் இளம்பெண் உட்பட அவரது பெற்றோரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டு டிரைவர்களான கண்ணன், பாபு, ரவி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.