ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான 5000 மீட்டர் பந்தய நடை பயணத்தில் இந்திய தடகள வீரர் நிதின் குப்தா கடைசி நொடியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். போட்டியின் போது கடைசி 50 மீட்டருக்குள் நித்தின் முன்னிலை பெற்ற நிலையில் போட்டி முடிவடையும் சில அடிகளுக்கு முன்பே தனது வெற்றியை கொண்டாட துவங்கினார்.

அந்த சில நொடிகளில் வேகம் குறைந்த நிலையில், பின்வந்த சீனாவின் ஷூ நிங் ஹாவும், நிதினுடன் போட்டியில் இணைந்தார். இதனால் வெறும் 0.01 மைக்ரோ செகண்டில் சீன வீரர் முன் சென்றார். அந்த போட்டியின் முடிவை புகைப்பட அடிப்படையில் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த புகைப்பட முடிவில், சீன வீரர் 20 நிமிடம் 21.50 வினாடிகளில் பந்தயத்தை முடித்துள்ளார். இந்திய வீரரான நிதின் குப்தா 20 நிமிடம் 21.51 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார். கடைசி வினாடி கொண்டாட்டத்தால் இந்தியா வெள்ளி பதக்கத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிதின் குப்தா 20 வயதுக்குட்பட்ட 5000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 19 நிமிடம் 24.48 வினாடி நேரம் என்ற சாதனையை வைத்துள்ளார். மேலும் மற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.