
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க துரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தாக்குதலில், தன் கண்முன்னே அப்பாவி மக்கள் சுடப்படுவதைக் கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட பயங்கரவாதிகள் சையது அடிலை துப்பாக்கியால் சுட்டனர். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர் மட்டும்தான். இவருக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்