அமெரிக்காவில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஹூஸ்டானின் வில்லியம் பி. ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது உடைகளை கழற்றி விட்டு அங்கும் இங்குமாக கத்திக்கொண்டே நடந்துள்ளார். இதனால் விமானத்திலிருந்து மற்ற பயணிகள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெண் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானம் முழுவதும் உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக கத்தி கூச்சல் இட்டுள்ளார்.

மேலும் ஒளிபரப்பு பகுதியில் உள்ள கதவை தட்டி பணியாளர்களிடம் தகாத முறையில் பேசி  தன்னை விமானத்திலிருந்து இறக்கி விடுமாறும் கத்தியதாக மற்ற பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது. விமான பணியாளர்கள் சிலர் அந்தப் பெண்ணை ஒரு போர்வையால் மூட முயன்ற போது அதை அந்தப் பெண் மீண்டும் கழற்றிவிட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து விமானம் விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியவுடன் விமான அதிகாரிகள் அந்தப் பெண்ணை மனநல மருத்துவ மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநிலை சரியில்லாத அந்தப் பெண்ணின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் விமானத்தில் ஏற்றப்பட்ட பயணி தொடர்பான பிரச்சனை காரணமாக எங்களது விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி உள்ளது என தெரிவித்துள்ளனர்.