
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், டெல்லாஹாசியில் உள்ள Florida State University (FSU) வளாகத்தில் வியாழக்கிழமை திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மாணவர் சங்கம் அருகே நடந்த இந்த தாக்குதலில், ஃபீனிக்ஸ் இக்னர் என்ற 20 வயதான இளைஞர் துப்பாக்கியுடன் நடந்து கொண்டு கம்பஸ் மைதானத்தில் துப்பாக்கியால் சுட்டார்.
அவரது துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த உடனேயே பல்கலைக்கழகத்தில் அவசர நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இக்னர், லியான் கவுண்டி ஷெரிப் அலுவலரின் மகனாகவும், அதே அலுவலகத்தின் இளையர் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர். அவர் இந்த தாக்குதலுக்கு தாயாரின் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், அதே துப்பாக்கி குற்றச்செயலுக்குப் பிறகு மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், கடந்த காலங்களில் அமெரிக்கக் கல்லூரிகளில் நிகழ்ந்த வன்முறைகளை நினைவூட்டுகிறது. 2007-ம் ஆண்டு வர்ஜீனியா டெக் துப்பாக்கிச் சூடு, 2023-ம் ஆண்டு மிசிகன் மற்றும் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகங்களில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து இது மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக மாறியுள்ளது.