
வேலையின்மை, வறுமை கடன் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு இந்தியர்கள் பலரும் வெளிநாடு வேலைக்கு செல்கின்றனர். பலருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் சில நபர்கள் ஏமாற்றப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர். அது பற்றி அவர்கள் தகவல் தெரிவித்தவுடன் இங்கிருந்து சென்று சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள். இங்கே நான் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி கணவர் உள்ளார். நான் அவர்களை காப்பாற்றுவதற்காக குவைத் வந்தேன். ஆனால் நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன். என்னை முதலாளி அறையில் பூட்டி வைத்திருப்பதுடன், உணவு கொடுக்காமல் துன்புறுத்துகிறார். என் உடல் நலம் மோசமாகியுள்ளது. தற்போது வீட்டு காவலில் உள்ளேன்.
இந்த வேலைக்கான பயணத்தை ஏற்பாடு செய்த முகவர் என்னை மிரட்டியதுடன் போனில் பேசுவதற்கான வசதியும் தடை செய்து வைத்துள்ளார். இதனால் குடும்பம் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள் ஐயா என ஆந்திரா அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டிக்கு கோரிக்கை எடுத்துள்ளார். அந்த பெண் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்பது தெரியவந்தது. அவரது கோரிக்கையை ராம் பிரசாத் மத்திய அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.