உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமில் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டது.

அதன் பின்னர் ஆசிபா தன் முன்னாள் கணவரின் மூத்த சகோதரனான அதில் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இதைத் தொடர்ந்து  சப்தல்பூர் கிராமத்தில் வசித்து வந்த ஆசிபாவின் தாய் அஸ்மா  தனது மகளை தொடர்பு கொள்ள முயன்ற போது,கணவர்  அதில் ஆசிபாவிற்கு உடல்நிலை சரியில்லை,வெளியூர் பயணத்தில் இருக்கிறார் என ஒரு வருடமாக கூறிவந்துள்ளார்.

இதனால் ஆசிபாவின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் கடந்த மார்ச் 25,2025 அன்று காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிபாவின் கணவர் அதில் மற்றும் முன்னாள் கணவர் கமில் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்களிடமிருந்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது. அதாவது ஆசிபா மீது சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் கமில் மற்றும் மாமியார் சந்தினியுடன் சேர்ந்து அதில் கொலைக்கு திட்டமிட்டதாக கூறினார்.

அதன்படி அவர்கள் ஆசிபாவை கழுத்தை நெரித்துகொன்று நைவாலா- ஹல்லு பூரா சாலையில் உள்ள குப்பை போடும் இடத்தில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் . அவர்கள் கூறியதன் அடிப்படையில் தற்போது காவல்துறை அதிகாரிகளால் ஆசிபாவின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.