
மகாராஷ்டிரா மாநிலம் புனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியாளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களின் தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் அரசு அதிகாரிகள் வேகமாக வேலை பார்க்கிறார்கள். லஞ்சம் கொடுக்கவில்லை எனில் வேலை நடக்காது.
நம்முடைய கட்டமைப்பில் சிலர் நியூட்டன்களுக்கு அப்பாக்களாக இருக்கிறார்கள். கோப்புகள் மீது அதிக எடை அதாவது அதிக பணம் இருந்தால் மட்டும்தான் வேலை வேகமாக நடக்கிறது. நமது நாட்டில் வேலைகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப்பணி துறைகளில் பணிகளை விரைவாக செயல்படுத்துவதற்கு காலக்கெடு அவசியம். இளைஞர்கள் தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் வேலையை வேகமாக பார்க்கிறார்கள் என்ற நிதின் கட்காரி கூறியது தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.