
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி சந்தைகளில் காய்கறியின் இறக்குமதி குறைவாக உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறிகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 15 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பீன்ஸ் கிலோ ரூபாய் 200, முருங்கைக்காய் ரூபாய் 80, உருளைக்கிழங்கு கிலோ ரூபாய் 50, கத்தரிக்காய் கிலோ ரூபாய் 40, கேரட் ரூபாய்60, பாகற்காய் ரூபாய் 80க்கும் விற்பனையாகிறது. இதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்களின் விளைச்சல் குறைவாக உள்ளதால் சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 35 ஆக இருந்த தேங்காயின் விலை தற்போது 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என காய்கறி சந்தை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். காய்கறிகளின் விலை அதிகரிப்பதைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்