வருகிற மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பஸ்களிலும் மின்னணு பயண சீட்டு கருவி பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திலும் விரைவு பேருந்து கழகத்திலும் கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மின்னணு பயண சீட்டு கருவி, அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதன் மூலம் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் இதுவரை 67.80 கோடிக்கு மேலான பயண சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 15.18 லட்சத்திற்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக நடைபெற்று உள்ளது. விரைவு பேருந்துகளில் வழங்கப்பட்ட 1.60 கோடிக்கும் மேலான பயண சீட்டுகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், கும்பகோணம் மாவட்டங்களில் முழுமையாக பயண சீட்டு கருவி அமலில் உள்ளது. சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மின்னணு பயண சீட்டு கருவி பயன்பாட்டிற்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.