
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பவுன்ராஜ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். சாப்பாடு ஆர்டர் செய்தவர் வீடு துரைப்பாக்கம் வி.ஜி.பி அவன்யூவில் உள்ளது. இதனால் அவர் தனது இருசக்கர வாகனத்தில், “கூகுள் மேப்” பார்த்தபடி சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப்பில் இருள் சூழ்ந்த பகுதியை காட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து அவசரமாக சென்ற பவுன்ராஜ் அங்குள்ள சதுப்பு நில சேற்றில் தனது இருசக்கர வாகனத்துடன் விழுந்து சிக்கிக் கொண்டார். அதிலிருந்து மீள முடியாத பவுன்ராஜ் கூச்சலிட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் ஆள் இல்லாததால் தனது செல்போனை எடுத்து 112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். பின் அவர்களுக்கு தனது இருப்பிட லொகேஷனை அனுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பவுன்ராஜை மீட்டு அவரது இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.