உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர், கோவிலில் பிரசாதம் வாங்கும்போது கடைக்காரர்களால் வற்புறுத்தலுக்கு உள்ளாகினர். பிரசாதம் வாங்க மறுத்த பியூஷ் மீது, கடைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சில கடைக்காரர்கள் கையிலுள்ள பெல்ட்கள் மற்றும் கைகலப்பில் ஈடுபடுவது, பெண்கள் தள்ளாடுவது போன்ற காட்சிகள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த தாக்குதலில் பியூஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் பியூஷ், பிகேடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், பிகேடி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் கடைக்காரர்கள் இந்த அளவுக்கு வற்புறுத்தல் மற்றும் வன்முறை மேற்கொள்வது கோவில் நிர்வாகம் மற்றும் காவல் பாதுகாப்பின் குறையை  வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.