
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தனது 12 வயது மகன் காணவில்லை என அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விரைந்து விசாரணையை தொடங்கினர். போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு உள்ளூர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன் குழந்தையின் குடும்பத்தினரிடம், அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தந்தையின் நண்பரான சச்சின் மீனா மீது சந்தேகம் எழுந்தது, போலீசார் அவரை தொடர்பு கொண்டபோது, சென்னையில் இருப்பதாக பொய்யாக கூறினர். ஆனால், மேற்கொண்டு விசாரணையில் ஜெய்ப்பூர் அருகே ஆக்ரா சாலையில் மீனா இருப்பது தெரியவந்தது.
இந்த தகவலின் பேரில், போலீசார் அவரது மொபைல் சிக்னலை கண்டறிந்து மீனா இருந்த இடத்திற்கே சென்றனர். அங்கு அவர்கள் மூடிய அறையில் குழந்தையை அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுவனின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு இருந்தது. போலீசார் சிறுவனை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். மீனா மற்றும் அவரது கூட்டாளி அசோக் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில் , மீனாவின்பண பிரச்சனைகள், அதிகப்படியான செலவினங்களின் மூலம் அவர் வாங்கிய கடனை அடைப்பதற்கான முயற்சியில் அவரது நண்பரின் மகனைக் கடத்தியது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது விசாரணையில் உள்ளனர், மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 6 மணி நேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். சிறுவனின் பெற்றோர் காவல் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தையின் தந்தையின் நண்பரே பண தேவைக்காக இந்த கடத்தலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.