திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையைத்து பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 2 நபருடன் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஆல்பிரட் ஜானை சந்தித்துள்ளார். அவரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் உத்தர பிரதேச மாநில கல்வித் துறையில் உதவிச் செயலாளராக இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் ஒருவர் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக புகார் அளித்துள்ளார். இந்த பெண்ணின் பேச்சில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. இவருக்கு உதவியவர் தாழையத்து பகுதியை சேர்ந்த ரூபிநாத் என்பதும் தெரிந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரூபிநாத்தை தூத்துக்குடி சிறையிலும் மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். இவர்கள் குறித்த முதல் கட்ட விசாரணையில் மங்கையர்கரசி சொந்த ஊர் திண்டுக்கல் என்பதும் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி பேராசிரியராக இருந்துள்ளார்.

அப்போது ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ரூபிநாத் என்பவர் தாழையத்து பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவர்கள் மீது ஆள்மாறாட்டம்  செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபிநாத் தனது மனைவி ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.