மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் மசாஜோ என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் ஆவார். இந்த கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வால்மிக் கரட் என்பவர் இந்த நிறுவனத்திலிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் உணவுத்துறை மந்திரி தனஞ்செய் முண்டேவின் உதவியாளராக இருக்கிறார். வால்மிக்கின் இந்த செயலை பஞ்சாயத்து தலைவரான சந்தோஷ் தேஷ்முக் கண்டித்துள்ளார். இதனால் வால்மிக் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அவரை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பின் காவல் நிலையத்தில் சரணடைந்த அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை விவகாரத்தில் மந்திரிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கு பெரிய அளவில் சர்ச்சையானதால் தனஞ்செய் முண்டே உணவுத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின் முதல்வர்  தேவேந்திர பாட்னாவிசுவுக்கு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். அதில் உடல்நல குறைவு மற்றும் சில காரணங்களால் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.