
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் ஆரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு- கனகபுரம் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள கழிவறையில் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடந்துள்ளது. அதனை சுத்தம் செய்த போது அங்குள்ள கோப்பையில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்து தூய்மையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் நேபாளத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில் நேபாளத்தை சேர்ந்த 22 வயதாகும் சுரேந்திரா மேக்ரா என்பவர் ராம் நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். அவர் அங்கேயே தங்கியும் வந்துள்ளார். இதில் அம்ருதா என்ற நேபாளத்தை சேர்ந்த பெண்ணை சுரேந்திரா மேக்ரா காதலித்து வந்துள்ளார்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக தனது காதலியை நேபாளத்தில் இருந்து அவர் பெங்களூருக்கு அழைத்து வந்ததோடு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் அம்ருதா கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி 2 பேருக்கும் முதலில் தெரியாமல் இருந்துள்ளது. கடந்த மாதம் வயிற்று வலியால் அம்ருதா அவதிப்பட்டு வந்துள்ளார். ஆகவே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அவர் 8 மாதம் கற்பனையாக இருப்பது தெரிய வந்தது. இதற்காக உயர்தர மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அம்ருதா மற்றும் சுரேந்திரா ஆகியோரிடம் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பெயரில் கடந்த மாதம் தனியார் மருத்துவமனைக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்து அம்ருதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கழிவறைக்கு சென்ற அவருக்கு அங்கு வைத்து ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை உயிருடன் உள்ளதா? இறந்து விட்டதா? என்பதை கூட கவனிக்காமல் உடனடியாக கழிவறை கோப்பைக்குள் குழந்தையை போட்டுவிட்டு தண்ணீரை இருவரும் ஊற்றி இருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த ரத்தத்தையும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 2 நாட்கள் கழித்து கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்தபோது தான் பச்சிளம் குழந்தையின் உடல் சிக்கி இருப்பதை தூய்மை பணியாளர் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து 2 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.