தமிழகம் முழுவதும் நேற்று அறநிலைத்துறையின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது மணமக்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி மற்றும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அறநிலத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில், இதுவரை 2226 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளதாகவும், 10238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதோடு சிலர் பக்தியை பகல் வேஷ  அரசியலுக்கு பயன்படுத்துவதாகவும், அரசின் சாதனைகளை தடுக்க வழக்குகளை தொடர்வதாகவும் அவர் கூறினார்.

திமுக அனைவரின் உரிமைகளை காக்கும் அரசு என்றும் அவர் கூறினார். திமுக அரசு தமிழில் குடமுழக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் மூலம் நாள்தோறும் 92 ஆயிரம் பேர் சாப்பிடுகின்றனர். மேலும் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.