
தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தமன் புகார் தெரிவித்தார். அதேபோன்று கோவை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக உயர்மட்ட நிர்வாகிகள், மற்ற மாநில பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்திருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.