
சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக சுற்றி கொண்டிருந்த ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பது தெரியவந்தது. இவர் தான் சைக்கிள்களை திருடி விற்பனை செய்துள்ளார்.
அதாவது அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறி வைத்து திருடியுள்ளார். சுமார் 20000 மதிப்புள்ள சைக்கிள்களை அவர் திருடுகிறார். பின்னர் அதனை வெறும் 3000 ரூபாய்க்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இருசக்கர வாகனங்களை திருடினால் சிசிடிவி மூலம் ஆய்வு செய்து காவல்துறையினர் கண்டுபிடித்து விடுகிறார்கள் என்பதற்காக இவர் சைக்கிளை திருடியதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம் இருந்து சுமார் 25 விலை உயர்ந்த சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.