
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும் எனவும், இதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது, இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.
பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் ஒன்றிணைவோம். என பதிவிட்டுள்ளார்.