
வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் பாஜக உறுப்பினர் வேலூர் மாவட்ட ஆன்மீக ஆலய மேம்பாட்டு செயலாளர் விட்டல் குமார்(47) காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விட்டல் குமார் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கில் பாஜகவினர், விட்டல் குமாரை கொலை செய்திருப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் திமுக பிரமுகரான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவரை கைது செய்யக்கோரி வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டல் குமாரின் உடலை வாங்க மறுத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாலா சேட் மகனின் வாகன ஓட்டுனர்கள் சந்தோஷ்(26), கமலதாசன் (24) ஆகிய இருவரும் காட்பாடி நீதிமன்றத்தில் விட்டல் குமாரை கொலை செய்ததாக சரணடைந்துள்ளனர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் 15 நாட்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்படி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்