
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் ஃபைபர் படகு ஒன்றில் இரு மீனவர்கள் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக கடற்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடுக்கடலில் தத்தளித்த படகை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அந்தப் படகில் இருந்த இலங்கை மீனவர்கள் ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த மார்ச் 15ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும், அப்போது படகு நடுக்கடலிற்கு சென்ற போது திடீரென என்ஜின் பழுதடைந்ததால் இரு மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் கூறியுள்ளனர்.
இதன் பின் காவல்துறையினர் படகை சோதனை செய்தபோது படகில் கஞ்சா பொட்டலங்கள் ஒரு மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய காவல்துறையினர் மீனவர்கள் இருவரையும் கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.