மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில், அக்னிவீரர்களுக்கு குண்டு வெடிக்கவைக்கும் பயிற்சி நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியில் அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20) மற்றும் சைஃபத் ஷிட் (21) ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

வியாழக்கிழமை மதியம் நடந்த இந்த விபத்தில், பயிற்சியின் போது குண்டுகளை பயன்படுத்தும்போது ஒரு குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த இரு வீரர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து நடந்ததற்கான காரணங்களை ஆராயும் விசாரணையை தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாததாலா, அல்லது ஏதேனும் தொழில்நுட்ப பிழை காரணமாகவா இந்த விபத்து நிகழ்ந்தது என்பது விரைவில் தெரியவரும்.