அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

சட்டவிராத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 2 மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு கடந்த திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், அவர் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை அளிப்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  ஏஆர்எல் சுந்தரேசன் ஆஜராகி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, அவருடைய உடல்நிலை சீராகவே இருக்கிறது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அன்றைய தினமே இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்தி வைத்திருந்தார்.. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு மீதான இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்  நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார். இதற்காக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு முதல் வழக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி உடைய அந்த ஜாமின் மனுவானது தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டுள்ளது..