தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்புகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முலமைச்சர் மு.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும்  இலவச உணவு வழங்க முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.