
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது தான் பிரச்சனை என்றும் கட்சி அலுவலகத்தில் மணி மண்டபம் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் கட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் அனுமதியுடன் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.