சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறு ஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு இதனை எதிர்த்து கேட்ட ஆசிரியரையும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது இனி அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது.

இந்நிலையில்  முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் வருங்கால பள்ளி செல்வங்கள் அனைவரும் முற்போக்கான, அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் பெற்றிடும் வகையில் மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் ஒருவர் பேசிய நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இனி அரசு பள்ளிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.