
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என்றும் கண்டிப்பாக 2026 தேர்தலில் மக்கள் அவர்களை விரட்டி அடிப்பார்கள் என்றும் கூறினார். அதோடு மன்னராட்சி முறையை ஒழிக்க விஜய் களத்திற்கு வரவேண்டும் எனவும் வேங்கை வயலுக்கு ஒருமுறையாவது விஜய் நேரில் செல்ல வேண்டும் எனவும் கூறினார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் நிலையில் ஆதவ் இப்படி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் திருமாவளவன் அவரை ஆறு மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த நிலையில் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.
அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இணைந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கிய சாமியின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது ஆதவ் அர்ஜுனாவின் voice of commons நிறுவனத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக விஜய் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் அவர்கள் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.