
பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய நிலையில் திடீரென பேருந்து மள மளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஓட்டுனர் சுதாகரித்துக் கொண்டு உடனடியாக ரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அரசு பேருந்து நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.