
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக வாதிட்டது. இதன் மூலம் மத்திய அரசு நீட் வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தூதரகங்கள் மூலமாக நீட் வினாத்தாள் அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு சரமாரி கேள்விகளை முன் வைத்தார். அதாவது கசிந்த வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி.? வினாத்தாள் எப்போது லாக்கருக்கு அனுப்பப்பட்டது.? லாக்கரிலிருந்து அவை எப்போது வெளியே எடுக்கப்பட்டது.? நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.? நீட் தேர்வு நடத்துவதற்கான முகாந்திரம் என்ன.? 1563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில் அதில் முழு மதிப்பெண் வாங்கிய 6 தேர்வர்களும் அடங்குவார்களா.? என்று பல்வேறு கேள்விகளை நீதிபதி தேசிய தேர்வு முகமையிடம் கேட்டார். மேலும் ஒரு இடத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்ததாக தேசிய தேர்வு முகமை வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.