தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எந்த வித திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயரை கூட நிதியமைச்சர் வாசிக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு எந்த விதத்திட்டங்களும் அறிவிக்கப்படாதது மற்றும் நிதி ஒதுக்கப்படாததற்கு ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

அதாவது அரசு தன்னுடைய சுயலாபத்திற்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்துள்ளது. மதவாத அரசியலை நாங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறோம் என்பதால் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவங்களை சிதைத்திடும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.