நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்று கூறி சீமானின் மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக சீமானிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் சீமான் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சீமான் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சீமான் மீதான பாலியல் வழக்கில் புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகைக்கு இழப்பீடு வழங்க 2 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவும் சீமானுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த நடிகை தரப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு வாதம் செய்ததால் அதன் அடிப்படையிலேயே இருதரப்பும் சமரசமாக பேசி உடன்பாடு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.