சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று கூறினார். இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்த பின்னரும் எதிர்கட்சிகள் குறை கூறுவது அரசியலாதாயத்திற்கு மட்டும்தான். யார் அந்த சார் என்று கேட்கிறார்கள். மேலும் அந்த சார் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.

அதன்பிறகு 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றம் மூலமாக குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். ஒருவேளை எதிர்க்கட்சியினரிடம் யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அதனை கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு வீண் விளம்பரத்திற்காக மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான் என்று கூறினார்.