
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சி போட்டியிட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வெற்றியை ஜனசேனா பதிவு செய்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பதி கோவிலில் லட்டுவில் மாட்டு கொழுப்பு உள்ளிட்ட விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் இது குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பவன் கல்யாண் பேசி இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக வழக்கறிஞர் ஒருவர் ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பவன் கல்யாண் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தற்போது அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு நவம்பர் 22ஆம் தேதி பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.