கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடந்தது. 45க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக இருந்த நிலையில் தற்போது 29 அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.