சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது, 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிதடங்களில் செயல்பட உள்ளது. இதில் முக்கியமான வழித்தடங்களான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைந்துள்ளது.

இதில் பூந்தமல்லி போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. கடந்த முறை மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்பட்டது. இம்முறை 35- 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தனர். இந்நிலையில் 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.