
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 54% மக்கள் வேளாண்மை தொழிலை நம்பி உள்ளனர். இதனால் இந்த ஆண்டாவது மத்திய பட்ஜெட் திட்டங்கள் இலக்கை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் ஜிடிபி-யின் வளர்ச்சி குறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கடந்த 2022-23ல் 9% இருந்தது, 2024-25ல் 6% குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் வேளாண் துறையில் ஏற்பட்ட பின்னடைவு தான்.
அதாவது விவசாயிகள் லாபம் பார்த்தால் தான் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். இதற்கு ஒரே வழி உணவுப் பொருட்களை பதப்படுத்துவது தான். அப்படி பதப்படுத்தி வைத்தால் தான் எல்லா நாட்களும் மக்களுக்கு உணவு கிடைக்கும். இதன் மூலம் உணவு தட்டுப்பாடு ஏற்படாது, விலைவாசியும் பெரிய அளவில் உயிராது. இதற்காக கடந்த 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.252 கோடி உணவு பதப்படுத்தும் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதுவே அடுத்த ஆண்டு 219 ஆக குறைக்கப்பட்டது. ஆனாலும் இந்தத் தொகையை முழுமையாக பயன்படுத்தாததால் இலக்கை எட்ட முடியவில்லை. கடந்த 2023-24 ம் நிதி ஆண்டில் மொத்தம் இந்த துறைக்கு 60 பணிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டது. 2024-25ல் 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெறும் 17 தான் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காரணம் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது தான்.
இதனால் பதப்படுத்துதல் துறையை வளர்க்க, உற்பத்தியுடன் இணைந்து ஊக்க தொகையை அறிவித்தது. ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படாததால் பொருளாதாரத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இது மட்டும் காரணம் இல்லை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாப்பது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி செய்வது, அரசு துறையில் காலி பணியிடங்கள், குறிப்பாக நீதித்துறையில் என பல துறைகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. எனவே இந்த ஆண்டாவது அரசு அறிவிக்கும் திட்டங்கள், வெறும் திட்டங்களாக மட்டுமல்லாமல் செயல் முறையில் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.