கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகன்பாறை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜான் தாமஸ்(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு ஜான் தாமஸ் படுத்த படுக்கையானார். அந்த காலகட்டத்தில் ஜான் தனது பெயரிலிருந்த வீட்டுடன் கூடிய 1 ஏக்கர் 37 சென்ட் இடத்தை தனது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜான் தமாசை பராமரித்து வந்த கன்னியம்மாளும் உயிரிழந்தார். இதனால் தனது தந்தையை கவனிப்பதற்காக மகன் ஒருவரை நியமித்துள்ளார். மேலும் தந்தையின் ஒய்வூதிய பணத்தையும் பெற்று அதிலிருந்து பணியாளருக்கு சம்பளம் வழங்கியுள்ளார். இந்நிலையில் ஊருக்கு வரும்போது எல்லாம் அவர் தனது தந்தையுடன் தகராறு செய்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜான் தாமஸ் கடந்த மாதம் 29-ஆம் தேதி பத்மநாதபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சப்- கலெக்டரும், தீர்ப்பாயத்தின் நடுவருமான கௌஷிக் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது மகன் தனது தந்தையை துன்புறுத்தியது உறுதியானது. இதனால் சப்-கலெக்டர் கௌஷிக் ஜான் தாமஸ் தனது மகனுக்கு எழுதி கொடுத்த 1 ஏக்கர் 37 சென்ட் சொத்து ஆவணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் சப்-கலெக்டர் நேரடியாக சென்று ஜான் தாமஸிடம் உத்தரவை வழங்கியுள்ளார்.