
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட்டை சேர்ந்த லூசி ஐசக் (32) என்ற ஆசிரியர் 12 வார கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது அவர் வழக்கமாக மருத்துவமனைக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் அவருக்கு முதுகுத்தண்டின் அருகே ஓவரி புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, குழந்தையைப் பெற்ற பிறகு புற்று நோய்க்கு சிகிச்சை அளித்தால் புற்றுநோய் விரிவடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாயும், தாயின் கருப்பையில் உள்ள குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அபூர்வமான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
அந்த அறுவை சிகிச்சை டாக்டர் சோலெய்மானி மஜட் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் செய்தனர். அந்த அறுவை சிகிச்சையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பெண்ணின் உடலில் இருந்த கருப்பையை வெளியே எடுத்துள்ளனர். கருப்பைக்குள் இருந்த குழந்தை பாதுகாப்பாக இருக்க சாலைன் என்ற திரவத்தால் மூடிய வெப்பமான கவரை பயன்படுத்தி ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை அந்த கவர் மாற்றப்பட்டு குழந்தையின் வெப்பநிலை சரியாக பராமரிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தாயின் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்ட பிறகு, கருப்பையும் அதில் உள்ள குழந்தையோடு மீண்டும் தாயின் உடலுக்குள் வைக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு லூசியின் கருப்பையில் குழந்தை தொடர்ந்து வளர ஆரம்பித்தது. அதன் பின் கடந்த ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டு சுமார் 6.5 பவுண்ட் எடையுடன் குழந்தை மீண்டும் ஆரோக்கியமாக பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் ரப்பர்டி ஐசக் என அவரது பெற்றோர்கள் வைத்துள்ளனர்.
மேலும் லூசி ஐசக், அவரது கணவர் ஆடம் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அந்த குழந்தையின் பிறப்பு ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக இருந்தது. உலகிலேயே சில முறை மட்டுமே இந்த வகையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாகவும், மருத்துவர்கள் மீதுள்ள நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது.