
புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித்துறையில் பல்வேறு முறை தேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதே தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது தலைமை பொறியாளர் தீனதயாளன் விசாரணை வளையத்திற்குள் வந்தார். இந்நிலையில் அவர் காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று சென்றார். அங்கு பல்வேறு அரசு பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார். அங்கு மேலும் சில பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை தனியார் ஒப்பந்ததாரர் இளமுருகனும் இருந்தனர்.
இந்நிலையில் அங்கு திடீரென சென்ற சிபிஐ லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் விடுதிக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட புகார் குறித்து சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இறுதியில் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தீனதயாளனின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதே நேரத்தில் மூலக்குளத்தில் உள்ள அவரது வீட்டிலும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வீட்டிலும், இளமுருகனின் வீட்டிலும், அவர்களுக்கு சொந்தமான இடத்திலும் பல மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இளமுருகன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜரின் அண்ணன் மகன் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து தீனதயாளன், சிதம்பரநாதன் மற்றும் இளமுருகன் ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக சிபிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த சோதனையில் 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.