கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் இரண்டாவது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கலாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒருவர் வாடகைக்கு வீடு கேட்பது போல கலாவதியிடம் பேச்சு கொடுத்தார். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் கலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து கலாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தங்க நகையை பறித்த நபர் கரூர் அம்மன் நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரியவந்தது. இதனால் சந்திரசேகரை போலீசார் அதிரடியாக கைது செய்து நகையை மீட்டனர்.