
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை சீனா வழங்கியுள்ளது. அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை சுமார் 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தூதர் தனது எக்ஸ்பிரக்கத்தில் கூறியதாவது, ஏப்ரல் 9ம் தேதி வரை சீனாவுக்கு செல்லும் இந்திய குடிமக்களுக்கு 80 ஆயிரம் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது.
சீனாவை பார்வையிட அதிகமான இந்திய நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார். இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆவர். மேலும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை சீனா தளர்த்தி உள்ளது. அதன்படி ஆன்லைன் முன்பதிவுகள் இல்லாமல் வேலை நாட்களில் தாங்கள் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம். இந்தியர்களுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் விண்ணப்பிக்கும் விசாக்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படுகின்றன.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். அதன் பின் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரிவிலக்கு அறிவித்தார். மேலும் சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்க சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா இந்தியாவுக்கு சலுகை அளித்துள்ளது. வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.