
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டு அணிகளும் மோதும் பாக்சிங் டே என அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டி பாக்சிங் டே எனவும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் தேவாலயங்கள் முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியில் தேவாலயங்களுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள்.
மறுநாள் டிசம்பர் 26-ஆம் தேதி அந்த பெட்டியை திறந்து அதில் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை ஏழை மக்களுக்கு தானமாக வழங்குவார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசு மற்றும் இனிப்புகளை கொடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.