ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். தினசரி இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்லும் நிலையில் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி கலக்கப்பட்டதாக சர்ச்சை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து நெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கம்மம் மாவட்டத்தில் கொல்லக்கூடம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பத்மாவதி என்ற பெண் அண்மையில் திருப்பதிக்கு சென்ற நிலையில் லட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லட்டுவில் குட்கா பேப்பர் மற்றும் சிகரெட் துண்டுகள் இருப்பதாக கூறி தற்போது வீடியோ வெளியிட்டு அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரிக்க தேவஸ்தான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் மீண்டும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.