தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகராஜ், தனது கள்ளக்காதலியான வளர்மதியுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகராஜ், தனது காதலியான வளர்மதியை மதுரை டிஆர்ஓ என கூறி, பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் புகார் அளித்ததன் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முருகராஜ், தனது காதலியான வளர்மதியுடன் சேர்ந்து அதிகாரிகள் போல நடித்து, 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வளர்மதி தன்னை டிஆர்ஓ என கூறி, முருகராஜ் தன்னை இன்ஸ்பெக்டர் என கூறி, பல தொழிலதிபர்களிடம் பட்டா, சொத்து கோரிக்கைகளை தீர்த்து வைப்பதாக கூறி ஏமாற்றி பணம் பெற்றுள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முருகராஜ், வளர்மதி இருவரும் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி சுமார் 15 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை செய்துள்ளனர். வளர்மதி, தனது பெயரில் புதிய வங்கிக் கணக்குகளை தொடங்கி, அவற்றில் முருகராஜின் பெயரை கணவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற மோசடிகளில் சிக்குவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் வளர்மதியின் வீட்டில் சோதனை நடத்தி, ஏராளமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களில் ஒசூர் மற்றும் ஏற்காட்டில் உள்ள சொத்துக்கள், கண்ணாடி மாளிகைகள் போன்றவை இருந்ததை கண்டறிந்துள்ளனர். முருகராஜ் பெயரில் சொத்துகள் மாற்றி எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, முருகராஜ் காவல்துறையிலிருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, அவரை பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.